"வீடியோ காலில்" மருத்துவர்கள் - அச்சமின்றி ஆலோசனை பெறலாம்..!

0 3457
"வீடியோ காலில்" மருத்துவர்கள் - அச்சமின்றி ஆலோசனை பெறலாம்..!

கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர்களிடம் வீடியோகால் மூலம் பேசி ஆலோசனை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியின் நவீன செயலிக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா அதிகமாக உள்ளது. மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் பெரும்பாலும் எப்போதும் நிரம்பி விடுவதால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பிற்கு ஆளாகின்றனர். லேசான அறிகுறியுடன் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதன் மூலம் மேலும் தொற்று பரவல் ஏற்படும் அச்சம் உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு தொற்று தொடர்பான சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றை வீட்டிலிருந்தே பெறும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் GCC Vidmed என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது.

மருத்துவ ஆலோசனை தேவைப்படுவோர் வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் இந்த ஆப் மூலமாக வீடியோ கால் மூலமாக மாநகராட்சி மருத்துவர்களுடன் உரையாடி உரிய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி இணை ஆணையர் அல்பி ஜான் கூறுகிறார்.

நோயாளிகளின் தேவையை பொறுத்து e-Prescription எனப்படும் இணையவழி பரிந்துரைச் சீட்டும் வழங்கப்படுகிறது. அவற்றை அருகில் உள்ள மருந்தகங்களில் காட்டி மாத்திரைகள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் விரைந்து மருத்துவம் பெறும் வகையில் 044-25384520 மற்றும் 1913 என்ற இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கு படுக்கைகள் காலியாக உள்ளன என்ற விவரம் உடனடியாக அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று சோர்வடையாமல் மாநகராட்சியின் இந்த தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டால் எங்கே படுக்கை வசதி உள்ளது என்பதையும் வீட்டிலிருந்தபடியே அறிந்து கொள்ள முடிகிறது என்கிறார் மருத்துவர் பிரதீப் செல்வராஜ்.

மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால்அ GCC Vidmed ஆப் சேவையை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மருத்துவ சேவை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments